உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே ஓட்டலில் திருடியவருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, டோல்கேட்டில் ஸ்டார் பிரியாணி ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த 2021 ஜனவரி 2ம் தேதி, வழக்கம் போல் ஓட்டலின் வெளி கதவை ஊழியர்கள் பூட்டிவிட்டு, இரவு துாங்கச் சென்றனர்.
காலையில் வந்து பார்த்தபோது ஓட்டல் கல்லா பெட்டியில் இருந்த 5 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது.
உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து, திருநெல்வேலி அடுத்த நாங்குநேரியை சேர்ந்த காளியப்பன், 52, என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் உளுந்துார்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட் எண் -1ல் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
திருட்டு வழக்கில் தொடர்புடைய காளியப்பனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, மாஜிஸ்திரேட் விஜயராஜேஷ் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் சுமதி, ஜான்சிராணி ஆஜராகினர்.