புதுச்சேரி : ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் ரூ.3.65 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் நல்லாம் சத்திய நாராயணா, 72; ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர். இவரது மொபைல் எண்ணிற்கு, கடந்த 2020ம் ஆண்டு, ஜூன் 28ம் தேதி குறுந்தகவல் வந்தது.
அதில், லாட்டரி சீட்டில் ரூ.10 லட்சம் பரிசு விழுந்திருப்பதாகவும், பரிசுத்தொகையை பெற குறிப்பிட்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், நல்லாம் சத்திய நாராயணா, அந்த மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். மறுமுனையில் பேசிய நபர், பரிசுத் தொகை பெற குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு முன்பணம் அனுப்புமாறு கூறினார்.
இதனை நம்பி, பல தவணைகளாக ரூ.3,65 லட்சம் அனுப்பினார். ஆனால், பரிசுத்தொகை வழங்காததால் சந்தேகமடைந்த அவர், மர்ம நபர் பேசிய மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது, மொபைல் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், புதுச்சேரி 'சைபர் கிரைம்' போலீஸ் பிரிவில் நேற்று முன்தினம், புகார் செய்தார்.
சைபர் கிரைம் போலீசார் இவ்வழக்கை லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு பரிந்துரை செய்தனர். போலீசார், மோசடி பிரிவில் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.