நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் புதிய பள்ளிவாசல் கட்டுவதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்து போலீஸ் நிலையத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் பெரிய தெருவில் பழமையான பள்ளிவாசல் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகமானதால், காயிதே மில்லத் தெருவில், அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் புதிதாக காயிதேமில்லத் பள்ளிவாசல் கட்டி வருகின்றனர். இந்த பணி முடியும் தருவாயில் உள்ளது.
இந்த பள்ளிவாசல் பயன்பாட்டுக்கு வந்தால் பெரிய தெரு பள்ளிவாசலுக்கு இடையூறாக இருக்கும். எனவே புதிய பள்ளிவாசலை திறக்க கூடாது என, பெரிய தெரு பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஷேக்தாவூத் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.
விசாரணை முடிந்த பிறகு புதிய பள்ளிவாசல் பணியை முடித்துக் கொள்ளலாம் என போலீசார் கூறினர்.
இதையறிந்த காயிதேமில்லத் தெரு முஸ்லிம்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு 9.௦௦ மணிக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். புதிய பள்ளிவாசலை திறக்க அனுமதிக்க வேண்டுமென கோரினர்.
பேச்சுவார்த்தை நடத்திய இன்ஸ்பெக்டர் சீனிவாசனிடம், புதிய பள்ளிவாசலை திறக்க அனுமதிக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால், நெல்லிக்குப்பத்தில் பதட்டம் நிலவி வருகிறது.