ஈரோடு: ஈரோடு, வில்லரசம்பட்டியில் தனியார் ரிசார்ட்டில், எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று மாலை, ௬:௪௫ மணி முதல், 9:00 மணி வரை ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறுகையில், ''அ.தி.மு.க.,வில் எந்த குழப்பமும் இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக்குழு உறுப்பினர்கள், வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டி உள்ளது. அ.தி.மு.க., வேட்பாளர் தென்னரசு மீண்டும் தேர்வு செய்யப்படுவார். அவரே வெற்றி பெறுவார். அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.
முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் கூறுகையில், ''தென்னரசு ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களால் அவர் மீண்டும் ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார். நீதிமன்ற உத்தரவுப்படி, வேட்பாளரை தேர்வு செய்து, பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று சமர்பிப்போம். பா.ஜ., எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி அடைவோம். வராவிட்டாலும், மகிழ்ச்சிதான்,'' என்றார்.