ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான கணினி சுழற்சி முறையில், பணி ஒதுக்கீடு செய்தல் நடந்தது. டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா முன்னிலை வகித்தார். கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:
இத்தொகுதியில், 238 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஓட்டுச்சாவடி அல்லாமல், 20 சதவீதமாக, 48 கூடுதல் ஓட்டுச்சாவடி மையங்கள் (ரிசர்வ்) சேர்த்து, 286 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. ஓட்டுச்சாவடிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றும் வகையில், அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் ஒரு முதன்மை அலுவலர், 3 நிலைகளில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் என, 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, 286 முதன்மை அலுவலர்கள், 858 - 3 நிலைகளிலான ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய, 62 அலுவலர்கள் என, 1,206 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பணியமர்த்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர்கள் துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் மூலம், ஓட்டுச்சாவடி மையங்களில் பணியாற்ற ஆணைகள் வழங்குவர். இவர்களுக்கான பயிற்சி முகாம் விரைவில் நடக்க உள்ளது. இவ்வாறு கூறினார்.