மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சித் தலைவராக இருந்த முருகேசன் உட்பட 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த 13 பேரை முன்கூட்டியே விடுவித்ததற்கு எதிராக தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை வழக்கறிஞர் ரத்தினம் 2019 ல் தாக்கல் செய்த மனு: மேலுார் அருகே மேலவளவு ஊராட்சித் தலைவராக இருந்த முருகேசன் உட்பட 6 பேர் 1997 ல் கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த ராமர், சின்ன ஒடுக்கன், செல்வம் உட்பட 13 பேரை எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி முன்கூட்டியே விடுவிக்க 2019 நவ.,8 ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை. அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ரத்தினம் மனு செய்தார்.
2019 நவ.,27 ல் நீதிபதிகள் அமர்வு, 'விடுவிக்கப்பட்ட 13 பேரும், மேலவளவிற்குள் நுழையக்கூடாது. வேலுார் மாவட்டத்தில் தங்க வேண்டும்,' என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. 2020 பிப்.,18 ல் நீதிபதிகள் அமர்வு, 'மனுதாரர் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுவதுபோல் உள்ளது. ஏற்கனவே இந்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை திரும்பப் பெறுகிறது,' என உத்தரவிட்டது.
முருகேசனின் மனைவி மணிமேகலா உட்பட சிலர், '13 பேரை முன்கூட்டியே விடுவிக்க பிறப்பித்த அரசாணையில் விதிமீறல் உள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்,' என மனு செய்தனர். நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர் மோகன் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கில் அழகர்சாமி, மார்க்கண்டன் உட்பட 3 பேரை தமிழக அரசு 2008 ல் முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனால் மேலவளவில் எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பின் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி அரசின் முடிவால் 1636 ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுதலையாவதற்கு தகுதி பெற்றனர். இதில் 13 பேரும் சிறையில் இருந்தபோது மற்றும் பரோலில் சென்றபோது அவர்களின் நடத்தை கண்காணிக்கப்பட்டது. அப்போது எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை என அரசு தரப்பு கூறுகிறது. அரசு முறையாக பரிசீலித்து விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.