புதுடில்லி: செயற்கை கண்ணீரை வரவழைக்கும் சொட்டு மருந்தால், நிரந்தர பார்வை இழப்பு ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அதை திரும்பப் பெற, சென்னையைச் சேர்ந்த மருந்து நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த 'குளோபல் பார்மா ஹெல்த்கேர்' நிறுவனம், 'எஸ்ரிகேர்' என்ற சொட்டு மருந்தை தயாரித்து, அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதை, அமெரிக்காவில் பயன்படுத்தியவர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் நோய் தடுப்புக்கான மையம் மருந்தை சோதனை செய்தது.
இந்த மருந்து, பாக்டீரியாவால் மாசடைந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறிய நோய் தடுப்பு மையம், இதனால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படுவதாக குற்றஞ்சாட்டியது. 'இந்த மருந்தை பயன்படுத்திய ஒருவர் உயிரிழந்துள்ளார்; 11 பேர் பார்வை இழந்துள்ளனர்' என தெரிவித்த நோய்த் தடுப்பு மையம், இந்த மருந்தை யாரும் வாங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், எஸ்ரிகேர் மருந்து உற்பத்தியை நிறுத்தியுள்ள குளோபல் பார்மா நிறுவனம், பயன்பாட்டில் உள்ள அவற்றை உடனடியாக திரும்பப் பெற நேற்று முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளில், இந்திய இருமல் மருந்துகளால் பல குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளை வெளிநாட்டு நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.