மதுரை: திருச்சியில் நடைபெற உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநாட்டிற்கு தடை கோரிய வழக்கில் எஸ்.பி.,பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சென்னை சூபி இஸ்லாமிக் வாரியம் வெளிவிவகாரத்துறை ஆலோசகர் சவுகத் அலி முகமது தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (டி.என்.டி.ஜெ.,) மாநாடு திருச்சியில் நாளை (பிப்.,5) நடக்கிறது. இதற்கு அனுமதியளிக்க போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதை அவசர வழக்காக பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு: மாநாட்டு அறிவிப்புகளில் சில ஆட்சேபகரமான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் சமூகத்தில் பதட்டம், பாதிப்பு ஏற்படும். இந்த அமைப்பினர் ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பளித்த கார்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக மதுரை, திருநெல்வேலியில் போராட்டம் நடத்தினர். நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினர். அரசு தரப்பு: தனியார் இடத்தில் மாநாடு நடக்கிறது. ஏற்கனவே மாநாடு நடந்தபோது எவ்வித விரும்பத்தகாத சம்பவமும் நடைபெறவில்லை. மனுதாரர் அச்சத்தின் காரணமாக மனு செய்துள்ளார். மாநாட்டிற்கு எதிராக ஆட்சேபனை வந்தது. டி.என்.டி.ஜெ., தரப்பில் அனுமதி கோரியுள்ளனர்.
மேடையின் உறுதித் தன்மை சான்று, மின்வாரியம், தீயணைப்புத்துறையின் தடையில்லாச் சான்று பெற்றபின் பரிசீலித்து முடிவு செய்யப்படும். டி.என்.டி.ஜெ.,தரப்பு: இதுவரை 10 மாநாடுகள் நடத்தியுள்ளோம். தற்போது அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டை நிறுத்தும் நோக்கில் கடைசி நேரத்தில் மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள்: திருச்சி எஸ்.பி., உடனடியாக இருதரப்பிலும் விளக்கமளிக்க வாய்ப்பளித்து பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.