புதுக்கோட்டை: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த கடலோர காவல் படை போலீஸ்காரரை, கீரனுார் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் பகுதியில், 16 வயது சிறுமி கர்ப்பமடைந்தார். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்ததில், கடலோரக் காவல் படை போலீஸ்காரர் உள்ளிட்ட நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், கடந்த மாதம், மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கீரனுாரை சேர்ந்த ரஞ்சித், 40; துரைராஜ், 43; ஆனந்த், 30, ஆகியோரை, கடந்த மாதம் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடலோரக்காவல் படை போலீஸ்காரர் வடிவேல், 45, என்பவரை, மகளிர் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவரையும் கைது செய்து கீரனுார் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.