டிப்ளமோ மாணவன் துாக்கிட்டு தற்கொலை
குளித்தலை: குளித்தலை அடுத்த, கீரனுார் பஞ்., மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 48; கூலி தொழிலாளி. இவரது மகன் யுவன் சங்கர், 18; டிப்ளமோ மெக்கானிக், 3ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, 6:30 மணியளவில் கல்லுாரிக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்தவர், மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தோகைமலை போலீசார் மாணவனின் சடலத்தை கைப்பற்றி, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மாணவனின் தந்தை பாலசுப்பிரமணியன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சேதமடைந்த சாலையால் கிராம மக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே உடையந்தோட்டம் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அருகே சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மகிளிப்பட்டி கிராமத்தில் இருந்து உடையந்தோட்டம் வரை செல்லும் சாலை வழியாக இப்பகுதி விவசாயிகள் விளை பொருட்களை, டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களில் எடுத்து செல்கின்றனர்.
தற்போது இந்த சாலை பல இடங்களில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், தற்போது, அறுவடை செய்த நெல், வைக்கோல் கட்டுகளை எடுத்துச் செல்லும் விவசாயிகள், கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மகிளிப்பட்டி - உடையந்தோட்டம் சாலையை சீரமைக்க, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.