கரூர்: வாங்கல் அருகே உயர்மட்ட பாலத்தில் வழிப்பறியை தடுக்க, நாள்தோறும் செக்போஸ்டில், போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் வாங்கல், நாமக்கல் மாவட்டம் மோகனுார் பகுதியை இணைக்கும் வகையில், காவிரியாற்றின் குறுக்கே, உயர் மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் அருகே, கரூர் மாவட்ட போலீஸ் சார்பில், செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதில், போலீசார் பணியமர்த்தப்பட்டிருந் தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக செக்போஸ்ட்டில், போலீசார் இருப்பது இல்லை. இதனால், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லும் பொதுமக்கள்
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: வாங்கல் காவிரியாற்று பகுதியில் உள்ள, மேம் பாலத்தில் வாங்கல் பகுதியிலும், மோகனுார் பகுதியிலும் போலீஸ் சார்பில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதில், மோகனுார் செக்போஸ்ட்டில் போலீசார் பெரும்பாலும், பாதுகாப்பில் உள்ளனர். ஆனால், கரூர் வாங்கல் பகுதியில் போலீசார் இருப்பது இல்லை. இதனால், வாகன ஓட்டிகளிடம், சில சமூக விரோதிகள் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அறுவடை செய்யப்படும் பழ வகைகள், கரூர் மாவட்டத்துக்கு பாலம் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. அப்போது, செக்போஸ்டில் போலீசார் இல்லாததால், சமூக விரோதிகள் வழிமறித்து பழங்களை வாங்கி கொண்டு, பணம் தராமல் மிரட்டுகின்றனர். இதை தடுக்க, போலீசாரை வாங்கல் செக்போஸ்டில், நாள்தோறும் பணியில் அமர்த்த வேண்டும். இவ்வாறு கூறினர்.