கரூர்: 'அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டி வரும், 8ம் தேதி கரூரில் தொடங்குகிறது,'' என, கரூர் மாவட்ட கூடைப்பந்து கழக சேர்மன் அப்னா தனபதி தெரிவித்தார்.கரூர் மாவட்ட கூடைப்பந்து கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.
மாவட்ட கூடைப்பந்து கழக சேர்மன் அப்னா தனபதி நிருபர்களிடம் கூறியதாவது:அகில இந்திய பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் வரும், 8ம் தேதி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கி, 12ம் தேதி நிறைவு பெறுகிறது. நாள்தோறும் மாலை நேரத்தில் தொடங்கி, நாக்-அவுட் முறையில் போட்டி நடக்கும், இந்த போட்டியில், 12 அணிகள் பங்கேற்கிறது. போட்டியை, மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தொடங்கி வைக்கிறார்.
இறுதி போட்டி நடைபெறும் நாளில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்குகிறார். முதல் பரிசாக, 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக, 40 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக, 30 ஆயிரம் ரூபாயும், நான்காம் பரிசாக, 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. 4,000 பேர் அமர்ந்து பார் க்கும் வகையில், கேலரிகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் கார்த்தி, துணைத்தலைவர் குழந்தைவேல், கரூர் மாவட்ட பி.என்.ஐ., (தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு) இயக்குநர் கோபால கிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.