கிருஷ்ணகிரி: நிலப்பிரச்னை தொடர்பான புகார்களை அளிக்க நாளை ஓசூரில் சிறப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க, 10 பயிற்சி எஸ்.ஐ.,க்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், கடந்த வாரத்தில் சோதனை நடத்தி, வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தல், அனுமதியற்ற பார்கள், மது பதுக்கல் உள்ளிட்ட வகையில், 168 வழக்குகள் பதிவு செய்தனர்.
இதில், 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கர்நாடக மது வகைகள், 50 லிட்டர் உள்பட மொத்தம், 200 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வழக்கில், 4 பேர் கைது செய்யப்பட்டனர். தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதில், 41 வழக்குகள் பதிந்து, 42 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 659 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், லாட்டரி விற்ற, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் மாவட்டத்தில் அதிகரித்து வரும் நில மோசடி, பணப்பிரச்னை, கட்ட பஞ்சாயத்து தொடர்பான புகார்களை அளிக்க நாளை ஓசூரில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.இதில், பாதிக்கப்பட்டவர்கள் ஓசூர் ஏ.எஸ்.பி., அலுவலகத்தில் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை புகார் அளிக்கலாம். கிருஷ்ணகிரி எஸ்.பி., அலுவலகத்திலும் மற்றொரு நாளில் நிலப்பிரச்னை தொடர்பான புகார்கள் அளிக்க சிறப்பு முகாம் நடக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.