ஓசூர்: ஓசூர் மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 517 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில், 45 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக இல்லை. இதனால், பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஏற்கனவே ஆய்வு பணிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய, 'சென்டேஜ்' கட்டணங்கள் உட்பட, 574.96 கோடி ரூபாய்க்கு திட்ட செலவு மதிப்பிடப்பட்டது. இந்நிலையில், 516.85 கோடி ரூபாய் தற்போது ஒதுக்கப்பட்டு, அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிதியில், 170.56 கோடி ரூபாயை மத்திய அரசும், 155.06 கோடி ரூபாயை தமிழக அரசும், 249.34 கோடி ரூபாயை, ஓசூர் மாநகராட்சி மற்றும் வெளிப்புற உதவிகள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன. நிதி ஒதுக்கீடு முடிந்த நிலையில், டெண்டர் பணி விரைவில் துவங்கவுள்ளது.