பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே, விலை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியும், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தும் வரும், 2 யானைகளை பிடிக்க, 'கும்கி' யானையை வனத்துறையினர் அழைத்து வந்துள்ளனர்.
பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான பேடரஅள்ளி, பாலவாடி, பள்ளிப்பட்டி, என்டப்பட்டி, ஆசாரஅள்ளி, பணைக்குளம், தொட்லாம்பட்டி பகுதிகளில் கடந்த, 4 மாதமாக, 2 காட்டு யானைகள் விளை நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வந்தன. பின், பொங்கல் அன்று, வேப்பிலை அள்ளி பகுதியில் நெல் வயலில் இறங்கி சேதப்படுத்திய யானைகளை, விரட்டாமல் மெத்தனம் காட்டுவதாகக் கூறி கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில், பஞ்., தலைவர் தாக்கப்பட்டார். தொடர்ந்து, வனத்துறையினரை கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், கூகுட்டமரதஅள்ளி கிராமத்தில், குடிசையில் துாங்கிக் கொண்டிருந்த மாணிக்கம் என்ற முதியவரை, யானை கட்டிலோடு துாக்கி வீசி தாக்கியது. இதில், படுகாயமடைந்த முதியவர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் காட்டுயானைகளை மயக்க ஊசி போட்டு பிடித்து வெளியேற்ற வேண்டும் என, விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நேற்று காலை, ஆனைமலை பகுதியிலிருந்து, 45 வயதுடைய கும்கி யானை ஒன்று, பாப்பாரப்பட்டிக்கு வரவழைக்கப்பட்டது.
பாகன்கள், 2 பேர் உடன் வந்துள்ளனர். மேலும், வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் பாப்பாரப்பட்டியில் முகாமிட்டுள்ளனர்.