தனியார் வங்கி நெருக்கடி குத்தகைதாரர் போராட்டம்
சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி அடுத்த மேட்டு வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன், 50. இவர் குத்தகை நிலத்தில் விவசாயம் செய்கிறார். அந்த நில உரிமையாளர் மோகன், நிலத்தின் மீது, தனியார் வங்கியில் கடன் பெற்று வட்டி செலுத்திய நிலையில், வங்கி மூலம் அந்நிலத்தை வேறு நபருக்கு எழுதி கொடுத்ததாக தகவல் வெளியானது.
இதனால் குத்தகைதாரர் ஜெயராமனை, நிலத்தைவிட்டு வெளியேற, தனியார் வங்கி இரு மாதமாக நெருக்கடி கொடுத்துள்ளது. அன்னதானப்பட்டி போலீசாருடன் நேற்று, வங்கி நிர்வாகம், நிலத்தை கையகப்படுத்த வந்தது. அப்போது, வயலில் வேலை செய்து கொண்டிருந்த, 10க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, வங்கி, போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
மேலும் இந்த நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளதால் வெளியேற மாட்டோம் எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். அதேநேரம் நிலத்தை சுற்றி வேலி அமைக்க வங்கி நிர்வாகத்தினர் முயன்றதால் பதற்றம் உருவானது. இருப்பினும் வழக்கு நிலுவையால், போலீசார், வங்கி நிர்வாகத்தினர் அங்கிருந்து திரும்பினர்.
அரசு மருத்துவமனையில் தேசிய நல குழுமம் ஆய்வு
சேலம்: தேசிய நல குழும இணை இயக்குனர் கிருஷ்ணலீலா தலைமையில் மருத்துவ குழுவினர், நேற்று சேலம் மாவட்டத்துக்கு வந்தனர். மருத்துவ நிபுணர்கள், 9 பேர், 5 குழுவாக பிரிந்து ஆய்வில் ஈடுபட்டனர். கிருஷ்ணலீலா, ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.
சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டப்பணி, மகப்பேறு மருத்துவ சிகிச்சை பிரிவு, மாவட்ட காசநோய் பிரிவு, பாதிக்கப்பட்ட பச்சிளங்குழந்தை பிரிவு, நோய் இயல், நுண்ணுயிரியல் துறைகளில் ஆய்வு நடந்தது.
தொடர்ந்து ஓமலுார், வாழப்பாடி அரசு மருத்துவமனை, காடையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, கன்னங்குறிச்சி, காரிப்பட்டி உள்பட, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் - 7, துணை சுகாதார நிலையம் - 4, என்.ஜி.ஜி.ஓ., காலனியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு நடந்தது.
நோயாளிகள் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கும் முறை, போதிய கட்டமைப்பு, தேவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.