சென்னையில் விஷமிகளின் ஆயுதமாக மீண்டும் 'போஸ்டர்' கலாசாரம் மாறி வருகிறது. சமூக விரோத செயல்களை துாண்டி விடும் வகையிலும், மற்றொருபுறம் அழகு சேர்க்கப்படும் சிங்கார சென்னையை அலங்கோலமாக்கும் வகையிலும், இந்த போஸ்டர் கலாசாரம் மாறி வருகிறது. இதைத் தடுக்க, திறந்தவெளி பாதுகாப்பு சட்டத்தின்படி, அச்சகத்தின் பெயரில்லாத போஸ்டர்கள் ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை மாநகரை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்கு பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தாலும், நகரை அலங்கோலப்படுத்தும் நடவடிக்கைகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் தொடர்கின்றன.
அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சிகள், தனிநபர் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும் கண்ணீர் அஞ்சலி போன்றவை நகரில் பெரும்பாலான பகுதிகளில் போஸ்டர்களாக அச்சிடப்பட்டு ஒட்டப்படுகின்றன.
ஆக்குவதும் நானே!
இந்த போஸ்டர்கள், பிரதான சாலையோரங்களில் உள்ள சுவர்கள், மின்சார பாக்ஸ், பேருந்து நிறுத்தங்கள், தெரு பெயர் பலகை, மெட்ரோ ரயில் நிலையம், கோவில் சுவர்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஒட்டப்படுகின்றன.
பொது இடங்களை அலங்கோலமாக மாற்றிய போஸ்டர்கள், சுற்றுலாப் பயணியர் உள்ளிட்டோரை முகம் சுளிக்க வைத்தன.
தமிழகத்தில் தி.மு.க., அரசு பொறுப்பேற்று, அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி தேர்தல் முடிவடைந்து புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற நிலையில், சென்னை நகரை அழகுபடுத்தவும், அலங்கோல சீரழிவுகளை கட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, போஸ்டர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தது. இவ்வகையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போஸ்டர்களை, பணியாளர்களை கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். போஸ்டர் ஒட்டியவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், மீண்டும் போஸ்டர் கலாசாரம் தலை துாக்காதபடி, சிங்கார சென்னை - 2.0 திட்டத்தின் கீழ், பல லட்சம் ரூபாய் செலவில் சுவர்களில், மாநகர் வரலாறு, பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டன.
இதன் பயனாக, சில மாதங்கள் போஸ்டர்கள் ஒட்டுவது சென்னையில் குறைந்திருந்தது.
அழிப்பதும் நானே!
இதற்கிடையே, ஆளுங்கட்சியான தி.மு.க.,வினரே, தங்கள் வீடு சுப நிகழ்ச்சிகள் முதல் கட்சி தலைவர்கள் பிறந்த நாள், பொதுக்கூட்ட நிகழ்வுகள், நிர்வாகிகள் மறைவு உள்ளிட்ட பலவற்றிற்கு போஸ்டர் ஒட்டும் கலாசாரத்தை துவக்கி வைத்தனர்.
அவர்களை தொடர்ந்து, அ.தி.மு.க., - பா.ஜ., நாம் தமிழர், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், போட்டி போட்டு போஸ்டர் கலாசாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.
இன்னொரு புறம், தனிநபர் தாக்குதல்கள் மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும், பல இடங்களில் விதிமீறிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் - 1959ன் படி, பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், போஸ்டர் அச்சடிக்கும் நபர் விபரம், அச்சகத்தின் பெயர் மற்றும் பதிவு உரிம எண், போஸ்டர் ஒட்ட மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற பதிவு எண் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அவற்றை மீறி, பெரும்பாலான போஸ்டர்கள், எவ்வித விபரமும் இன்றி, விதிமீறிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.
விபரம் இல்லாத போஸ்டர்கள், அச்சிட்ட அச்சகத்தின்மீதும், அச்சிட காரணமானவர்கள் மீதும், திறந்தவெளி பாதுகாப்பு சட்டத்தின் படி, போலீசில் புகார் அளித்து, குற்றவியல் வழக்கு அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், அச்சட்டத்தை மறந்த மாநகராட்சி அதிகாரிகள், பின்புலம் இல்லாத தனிநபர்களுக்கு மட்டுமே, 500 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.
அரசியல் கட்சினர் போன்றவர்கள் மீது குறைந்தபட்ச அபராதத் தொகையைக் கூட வசூலிக்க முடியாமல், அவர்கள் மாநகரை அலங்கோலப்படுத்தும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
இது குறித்து, கேட்ட போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:அச்சக பெயர் இல்லாமல் ஒட்டப்படும் போஸ்டர்கள் குறித்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெயரின்றி போஸ்டர் அச்சிட்டு கொடுக்கும் அச்சகங்கள் மூடி 'சீல்' வைக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்படும். நள்ளிரவில் போஸ்டர் ஒட்டும் நபர்கள் வாயிலாக, இது போன்ற போஸ்டர்களை அச்சிடும் அச்சகங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. போஸ்டர் அச்சிட மாநகராட்சியின் அனுமதி அவசியம்.விதிகளை மீறி போஸ்டர்களை அச்சிடக்கூடாது. போஸ்டர் ஒட்டுவதை தடுக்க, காவல் துறை மற்றும் இதர அரசு துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சிங்கார சென்னை - 2.0 திட்டத்தின் கீழ், திடக்கழிவுகள் அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்து பூங்காக்கள் அமைத்தல், போஸ்டர் இல்லாத மாநகரை உருவாக்குதல் போன்ற பணிகள் நடக்கின்றன. கடந்தாண்டு போஸ்டர் ஒட்டியோரிடம் இருந்து மட்டும் 16.49 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -