குன்றத்துார், குன்றத்துார் அடுத்த நத்தம், திருநீர்மலை செல்லும் சாலையில், ஸ்ரீதேவி காத்தியாயினி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில், மந்தைவெளி அம்மன் மற்றும் கங்கை அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, சுவாமி தரிசனம் முடிந்து கோவில் நடை சாத்தப்பட்டது. வழக்கம்போல் நேற்று காலை கோவில் துாய்மை பணிக்கு ரவி என்பவர் வந்தபோது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் சிதறிக் கிடந்தது.
உண்டியலில் இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள், நாணயங்களை மட்டும் விட்டுச் சென்றுள்ளனர்.
இது குறித்து குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோல, குன்றத்துார் அடுத்த சிறுகளத்துார், கெலடிபேட்டை பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் மற்றும் குன்றத்துார் புது வட்டாரம் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோவில் உண்டியலை உடைக்க முயன்ற போது, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்து, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
அனைத்து கோவில்களிலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, ஒரே கும்பல் என்பது கண்காணிப்பு கேமரா பதிவுகளால் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.