சென்னை, சென்னையைச் சேர்ந்த டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய வழக்கில், மருத்துவக் கல்லுாரி உரிமையாளரின் மகன் உள்ளிட்ட எட்டு பேருக்கு, தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கே.கே.நகரைச் சேர்ந்தவர், டாக்டர் இளங்கோவன்; அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். முத்துக்குமரன் மருத்துவக் கல்லுாரியில், சில மாதங்கள் 'டீன்' ஆக பணியாற்றினார்.
கே.கே.நகரில் உள்ள இவரது மருத்துவமனைக்கு அதிகாலையில் நோயாளி போல வந்த ஒருவர், டாக்டர் இளங்கோவனை தாக்கினார். அவருடன் வந்திருந்த கும்பலும் தாக்குதலில் ஈடுபட்டது.
சத்தம் கேட்டு மருத்துவமனையின் முதல் தளத்தில் தங்கியிருந்த டாக்டர் இளங்கோவனின் மகன் டாக்டர் குரு பாரத், தரைத்தளத்துக்கு வந்த போது, அவரையும் கும்பல் தாக்கியது.
'பெட்டிஷனா போடுறீங்க, உங்களை காலி பண்ணிடுவோம்' எனவும் மிரட்டியது. 2014 ஜனவரியில் இச்சம்பவம் நடந்தது.
இது தொடர்பாக, முத்துக்குமரன் மருத்துவக் கல்லுாரி உரிமையாளரின் மகன் கோகுல், அலெக்ஸ் உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிராக கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
'டீன்' ஆக பணியாற்றிய போது, கோகுல் உடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக, விசாரணையில் தெரிய வந்தது.
வழக்கை, சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி வி.தங்கமாரியப்பன் விசாரித்தார்.
போலீஸ் தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன் காயத்ரி ஆஜரானார். 8 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 48 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
அபராத தொகையில், 30 ஆயிரம் ரூபாயை டாக்டர் இளங்கோவனுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.