சேலம்:சேலத்தில் நள்ளிரவில் காதலியை சந்தித்த சட்ட கல்லுாரி மாணவர், 50 அடி உயர மொட்டை மாடியில் இருந்து குதித்ததில் பரிதாபமாக பலியானார்.
தர்மபுரி, வெண்ணாம்பட்டி சாலை, காமராஜர் நகரைச் சேர்ந்த சரவணன் மகன் சஞ்சய், 18; சேலம், கோரிமேடு மத்திய சட்ட கல்லுாரியில், எல்.எல்.பி., முதலாமாண்டு படித்தார். அதே பகுதியில் குடியிருப்பில் நண்பர்களுடன் தங்கியிருந்தார்.
அதே கல்லுாரியில் முதலாமாண்டு படிப்பவர் கரூரைச் சேர்ந்த, 18 வயது பெண். இவர், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். கரூரில் தனியார் பள்ளியில் இவர் படித்தபோதே, அங்கு படித்த சஞ்சயுடன் நட்பு ஏற்பட்டது. சட்ட கல்லுாரியில் சேர்ந்த பின் காதலாக மாறியது.
நேற்று முன்தினம் இரவு, 1:00 மணிக்கு காதலியை தேடி அவரது வீட்டு மொட்டை மாடிக்கு சஞ்சய் சென்றார். அங்கு காதலியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
வீட்டில் துாங்கிய மகளை காணாமல் அதிர்ச்சியடைந்த தாய் சத்தமிட்டு அழைத்துள்ளார். இதனால் பதற்றமான சஞ்சய் அங்கிருந்து தப்பிக்க, 50 அடி உயர மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கன்னங்குறிச்சி போலீசார் உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.