ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் பகுதியில், 65 ஆண்டுகளுக்கும் மேலாக, 10 ரூபாய்க்கு ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்த டாக்டர், வயது முதிர்வு காரணமாக இறந்தார். அவரது உடலுக்கு சுற்றியுள்ள கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம், சன்னிதி தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் தாத்தாச்சார்யார், 91. இவர், ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1956 - 1979 வரை மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்தார். பணி ஓய்வு பெற்ற பின், ஏழை மக்களுக்காக தன் வாழ்நாள் முழுதும் மருத்துவ சேவை செய்து வந்தார்.
மக்களிடம் துவக்கத்தில், 5 ரூபாய், பின்னர், 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்று வந்தார். ஏழை நோயாளிகளுக்கு பணம் பெறாமல் இலவசமாகவும் சிகிச்சை அளித்தார்.
இவரது மருத்துவ சேவையை பாராட்டி தனியார் அமைப்புகள், 'மருத்துவ சேவை செம்மல் விருது' வழங்கி கவுரவித்துள்ளன.
வயது முதிர்வு காரணமாக நேற்று அவர் இறந்தார். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி சென்றனர்.