தூத்துக்குடி:கோவில்பட்டியில் கோயில் வளர்ச்சிக்காக கடன் வாங்கிய பிரச்னையில் ரூ . 7 லட்சம் கேட்டு பூஜாரியை தாக்கி காரில் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இளஞ்செம்பூரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் உமையலிங்கம் 34. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தென்றல்நகர் பாண்டவர்மங்கலம் குடியிருப்பில் மனைவி மனிஷாவுடன் வசித்து வருகிறார். அங்குள்ள சாய்லிங்கம் கோயிலை நிர்வகிக்கும் இவர் பூஜாரியாகவும் உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் அவர் கோயிலில் இருந்து டூவீலரில் நண்பர் கோமதிராஜூ என்பவருடன் வந்து கொண்டிருந்தார்.
பசுவந்தனை ரோட்டில் வந்தபோது அவரை பின் தொடர்ந்து டூவீலர் மற்றும் காரில் வந்தவர்கள் இருவரையும் வழிமறித்து தாக்கினர். கோமதிராஜூவை அங்கிருந்து துரத்தினர். உமையலிங்கத்தின் கை கால்களை கட்டி காரில் ஏற்றி கடத்தினர். காயத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்ற கோமதிராஜூ, இதுகுறித்து பூஜாரி மனைவி மனிஷாவிடம் தெரிவித்தார்.
டி.எஸ்.பி., வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கடத்திய கார் சாத்தூர் அருகே நிற்பதை அறிந்து பின் தொடர்ந்து சென்றனர்.
அவரை கடத்திய கும்பல் மனிஷாவிடம் அலைபேசியில் பேசி ரூ. 7 லட்சத்தை கொண்டு வந்தால்தான் உமையலிங்கத்தை விடுவிப்போம் என மிரட்டினர்.
எனவே கோவில்பட்டி மேற்கு போலீசார் மனிஷா,கோமதிராஜூவையும் தங்க வாகனத்தில் அழைத்துக் கொண்டு காரை பின் தொடர்ந்தனர். கடத்தல் கும்பல் மனிஷாவிடம் மீண்டும் பேசி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு வருமாறு கூறினர்.
நள்ளிரவில் ராஜபாளையம் பஜாரில் கடத்தல் கார் நிற்பதை பார்த்தனர். மனிஷாவும் கோமதிராஜுவும் கார் அருகே சென்ற போது மறைந்திருந்த போலீசார் அக்காரை சுற்றி வளைத்தனர். போலீசை பார்த்ததும் அதில் இருந்த 6 பேர் தப்பி ஓடினர். காரை ஓட்டி வந்த டிரைவர் மனோகர் போலீசில் சிக்கினார்.
விசாரணையில் உமையலிங்கம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தரப்பிடம் கோயில் வளர்ச்சிக்காக கடன் வாங்கிய பிரச்னையில் கடத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட உமையலிங்கம் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.