கோவை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கே.ஜி., மருத்துவமனை, பல லட்சம் மக்களின் இதயம் கவர்ந்த மருத்துவமனையாக மாறுமளவுக்கு, கடந்த 50 ஆண்டுகளில் லட்சோப லட்சம் மக்களுக்கு மருத்துவசேவை செய்திருக்கிறது.
இந்த மருத்துவமனையை இளம் மருத்துவர் ஒருவர் துவக்கிய ஆண்டு 1974...அதுவரையிலும் வெளிநாட்டில் மருத்துவப்பணி செய்து கொண்டிருந்த அவரை, தாய்நாட்டு மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டுமென்று, அன்புக் கட்டளையிட்டு அழைத்து வந்தவர் அவருடைய தந்தை. அதைத் தட்டாத தனயன், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று கோவைக்கு வந்து துவக்கியதுதான் இந்த மருத்துவமனை.
வெறும் 10 படுக்கைகளுடன் ஒரே ஒரு செவிலியருடன் அவர் துவக்கிய அந்த மருத்துவமனையில், இப்போது இருப்பது 300 படுக்கைகள்; டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் என பணியாற்றுவோர் எண்ணிக்கை 1,300; பிரமாண்டமான கட்டமைப்புடன், பிரமாதமான மருத்துவ நிபுணர்களுடன் உள்ள இந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவ உபகரணங்களின் மதிப்பு மட்டுமே, ரூ.500 கோடி.
இன்னுயிர் காப்பதில் இணையற்ற சேவை செய்து வரும் அந்த இரண்டெழுத்து மந்திரம்தான்...கோவை கே.ஜி., மருத்துவமனை. தன் தந்தை கோவிந்தசாமி நாயுடுவின் அழைப்பை ஏற்று, வெளிநாட்டுப் பணியை உதறிவிட்டு, தாய்நாட்டுக்கு வந்து, தந்தையின் பெயரிலேயே மருத்துவமனையைத் துவக்கிய அந்த இளம் மருத்துவர்தான்... இன்றைக்கு இதன் தலைவராகவுள்ள டாக்டர் ஜி.பக்தவத்சலம்.
பொன்விழாவில் பாதம் பதிக்கும் கோவை கே.ஜி.,மருத்துவமனை, கடந்த 50 ஆண்டுகளில் பல லட்சம் உயிர்களைப் பிரசவித்திருக்கிறது; உரிய நேரத்தில் தரப்பட்ட உயிர் காக்கும் மருத்துவ சேவையால், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இரண்டாம் வாழ்க்கையைப் பரிசளித்திருக்கிறது. பலரின் உலகை வெளிச்சமாக்கியுள்ளது; விபத்துகளில் வீழ்ந்து கிடந்த பலரை எழுந்து நடக்க வைத்திருக்கிறது.
உலகையே வெறுக்க வைக்கும் வலியோடு வந்த பலருக்கு, உன்னத சிகிச்சை அளித்து, வலிமையோடு திருப்பி அனுப்பியிருக்கிறது. கே.ஜி.,யின் பலம், அதன் மனித வளம். இங்குள்ள மருத்துவ நிபுணர்கள்தான், இந்த மருத்துவமனையின் துாண்கள். பல்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் வாய்ந்த பல மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் படித்து, பணியாற்றிய பலரும், இங்கு வந்து மருத்துவப் பணி செய்கிறார்கள். இதனால்தான், வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள், சிகிச்சைக்கு கே.ஜி.,யை நாடித் தேடி ஓடி வருகிறார்கள். ஐம்பது ஆண்டு மருத்துவ சேவையாற்றியுள்ள கே.ஜி.,மருத்துவமனை, மருத்துவக் கல்வியிலும் பல சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த மருத்துவமனையின் எந்த தளத்துக்குச் சென்றாலும், மருத்துவ பரிசோதனைக்காகவோ, மருத்துவரைப் பார்க்கவோ காத்திருக்க நேர்ந்தாலும், 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்ற மெல்லிய கானம் துல்லியமாக ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த ஒலி, நம் இதயத்தின் துடிப்புகளை நிதானப்படுத்தும்; உடலின் செல்களை உற்சாகப்படுத்தும்; உயிர் காக்கப்படும் என்ற உத்வேகத்தை ஒவ்வொருவருக்கும் அளிக்கும்.
அது வெறும் ஒலியால் எழும் எண்ணமில்லை...
அரை நுாற்றாண்டு அயராத மருத்துவசேவையின் மீதான அசாத்திய நம்பிக்கை!
ஒரு லட்சம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை காப்பீட்டு திட்டத்தில் 5,000 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை 5 லட்சம் பேருக்கு ரத்த அழுத்தப்பரிசோதனை 4,000 நோயாளிகளுக்கு கொரோனா சிகிச்சை 1.75 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி.
மக்களின் நலனுக்காக, மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படும் பலவிதமான முயற்சிகளுக்கும், கோவை கே.ஜி.,மருத்துவமனை, தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. அரசின் காப்பீட்டுத் திட்டங்களில், இதுவரை பல லட்சம் மக்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. அதனால்தான், கே.ஜி., சுயசார்புள்ள அரசு சாரா நிறுவனம் என்கிறார் கே.ஜி., மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம்.இந்த வார்த்தைகளுக்கேற்ப, பல்வேறு பேரிடர் காலங்களிலும் பொது மக்களின் உயிரைக் காப்பதற்கு, கே.ஜி., மருத்துவமனை சிறப்பாகச் சேவையாற்றியுள்ளது. கோவை குண்டு வெடிப்பின்போது, அதில் காயம் பட்ட பலருக்கு அவசர சிகிச்சை அளித்து, அவர்களைக் காப்பாற்றியுள்ளது. கும்பகோணம் தீவிபத்தில் காயம்பட்டவர்களுக்கு ரத்ததானம் வழங்கி உயிர் காக்க உதவியது.சுனாமி, ஒக்கி புயல் போன்ற பேரிடர் காலங்களில், நாகை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளுக்கு, மருத்துவக் குழுவை அனுப்பி, மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டது. தமிழகத்தில் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் வெள்ளத்தால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டபோது, கொச்சி நகருக்கு மருத்துவக் குழுவை அனுப்பி, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியது.பேரிடர் காலங்களில் களமிறங்கிப் பணியாற்றும் இந்த சேவை... மனித சமூகத்துக்கான பேருதவி!
கோவை கே.ஜி.,மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலத்துடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால், உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் ஊற்றெடுக்கத் துவங்கிவிடும். அவரின் ஒவ்வொரு வார்த்தையும், நரம்புகளுக்குள் நம்பிக்கையைப் பாய்ச்சும். அவரிடம் பேசியதிலிருந்து...''படிப்பால் மட்டுமில்லை; கடவுளின் ஆசி இருந்தால் மட்டும்தான் ஒருவரால் டாக்டராக முடியும். என் தந்தை கே.கோவிந்தசாமி நாயுடுவின் பிரார்த்தனைதான் என்னை டாக்டராக்கியது. இப்போது டாக்டராக பலரும் பல முயற்சிகள் செய்கின்றனர்; கடவுளிடம் பிரார்த்தனை செய்கின்றனர். டாக்டராகி விட்டால், உடனே வெளிநாட்டுக்குக் கிளம்பி விடுகின்றனர்.நம் நாட்டிலேயே டாக்டர்கள் பற்றாக்குறை நிறையவுள்ளது. நமது அரசு, ஒருவரை டாக்டராக்க 20 லட்ச ரூபாய் செலவு செய்கிறது. ஆனால் அதை மறந்து விட்டு, வெளிநாடு செல்கின்றனர். நானும் அப்படித்தான் இரண்டு ஆண்டுகள் அமெரிக்காவில் டாக்டராகப் பணியாற்றினேன். தாய்நாட்டுக்குச் சேவை செய்ய என் தந்தை அழைத்ததால், மறுக்காமல் வந்து இந்த மருத்துவமனையைத் துவக்கினேன்.வெளிநாடு சென்று மருத்துவ மேல் படிப்பு படிக்கலாம்; மருத்துவத்தின் அதிநவீன மாற்றங்கள், கூடுதல் அறிவு, பயிற்சிகளைப் பெறலாம். ஆனால் அதன் பின் இங்கு வந்து நம் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். நான் கோவைக்கு வந்து, ஒரு விநாயகர் கோவிலுடன் சிறிய மருத்துவமனையைக் கட்டினேன். அதுதான் இன்றைக்கு ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.மருத்துவ சேவை செய்வோருக்கு கடவுளின் ஆசி அவசியம். கடவுள் நம்பிக்கை உள்ள டாக்டர்தான், அந்த நம்பிக்கை இல்லாதவருக்கும் சிகிச்சை அளித்துக் காப்பாற்றுகிறார். ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் யார் என்பதையும் கடவுளே தீர்மானிக்கிறார். டாக்டர்கள், நர்ஸ்கள், மக்களுக்குச் சேவையாற்றவே பிறந்தவர்கள். அதிலிருந்து சிறிதும் பிறழக் கூடாது.கே.ஜி., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக இருப்பதால் மட்டுமல்ல; இங்கு அதி நவீன கருவிகள் இருப்பதால் மட்டுமல்ல; அசாத்திய திறமையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றும் மருத்துவ நிபுணர்கள் இங்கு இருப்பதால்தான், வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர்.கே.ஜி., மருத்துவமனை, லாப நோக்கிற்காக மட்டும் துவக்கப்படவில்லை. கோவையில் இப்படித்தான் மருத்துவமனையை நடத்த வேண்டுமென்ற விதியை வகுத்த பெருமை, கே.ஜி.,க்கு உண்டு. அவசர சிகிச்சை என்றால், உடனே கே.ஜி.,க்குச் செல்லலாம் என்ற கோவை மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதுதான், அதையும் விட பெருமை தரக்கூடியது.''பொங்கி வரும் புன்னகையோடு முடிக்கிறார் கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம்.
கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம், 80 வயதிலும் 20 வயது இளைஞனைப் போல துள்ளலுடன் மருத்துவமனைக்குள் வலம் வந்து, மற்றவர்களையும் உற்சாகத்துடன் பணியாற்ற வைக்கிறார். எளிமையான, அதே நேரத்தில் வலிமையான வார்த்தைகளால் அவர் பகிரும் வீடியோ, ஆடியோ பதிவுகள், சமூக ஊடகங்களில் பல லட்சம் பேருக்கு நம்பிக்கை அளிக்கும் ஊக்க மருந்தாகவுள்ளன.சொல்லாலும் செயலாலும் இளைய தலைமுறைக்கு முன் மாதிரியாகவுள்ள டாக்டர் ஜி.பக்தவத்சலத்துக்கு விருதுகள் அணிவகுப்பது இதனால்தான்... சென்னை மருத்துவக் கல்லுாரி சார்பில், வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருது. சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது. ஸ்ரீ பாலகங்காதரநாத சுவாமிகள் வழங்கிய வைத்யரத்னா விருது. பிரம்ம குமாரிகள் வழங்கிய சிக் ஷா விபூஷண் விருது. தமிழக கவர்னர் ரோசய்யா வழங்கிய தர்மவீரா விருது. கோவை கத்தோலிக்க பிஷப் தாமஸ் அக்வினாஸ் வழங்கிய தெய்வீக மருத்துவர் விருது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கிய மருத்துவத்துக்கான தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் சிறந்த மருத்துவமனைக்கான விருது. 1984ல் அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி வழங்கிய டாக்டர் பி.சி.ராய் விருது. 2005ல் அன்றைய ஜனாதிபதி அப்துல் கலாம் வழங்கிய பத்மஸ்ரீ விருது.