கோவை:அறநிலையத்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி, கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த 6 பேர் கும்பலை கோவை போலீசார் கைது செய்தனர். முதல்வர் அலுவலக ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக நடித்தும், போலி பணி ஆணை வழங்கியும் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை எஸ்.எஸ்.குளம் அடுத்த கொண்டையம்பாளையத்தை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன், 56. பட்டறை தொழிலாளி.
இவர், தன் மகளுக்கு அரசு வேலை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். அதை இன்னொருவர் மூலம் அறிந்து கொண்ட சரவணகுமார், ஜவஹர் பிரசாத், எஸ்.சரவணகுமார், அன்பு பிரசாத் ஆகியோர், அவரை ஏமாற்றி பணம் பறிக்க திட்டமிட்டனர்.'ஹிந்து சமய அறநிலையத்துறையில், பல்வேறு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
எங்களால் வாங்கித்தர முடியும். நாங்கள் கேட்கும் பணத்தை மட்டும் கொடுத்தால் போதும்' என்று கூறியுள்ளனர்.சந்தான கிருஷ்ணனை நம்ப வைப்பதற்காக, ஒருவர் முதல்வரின் செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகவும், இன்னொருவர் முதல்வர் அலுவலக தாசில்தார் ஆகவும், மூன்றாமவர் புரோட்டோகால் அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.அவர்களது நடை, உடை, பாவனைகளை பார்த்து சந்தான கிருஷ்ணன், 'அரசு அதிகாரிகள்தான்' என்று நம்பி, அவர்கள் கேட்ட 21 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டார்.
உடனடியாக, பணி நியமன ஆணையையும் அவர்கள் வழங்கி விட்டனர். அதைக்கொண்டு பணியில் சேருவதற்கு சென்றபோது தான், 'அவர்கள் கொடுத்தது போலியான உத்தரவு' என்று தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சந்தானகிருஷ்ணன், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.விசாரித்த போலீசார், ஈரோடு மாவட்டம் பவானி சாகரை சேர்ந்த ஜவஹர் பிரசாத், 29, தேனி மாவட்டம் உத்தமபாளையம் அன்பு பிரசாத், 39, தர்மபுரி நிர்மலா நகர் எஸ்.சரவணகுமார், 33, கடலுார் மாவட்டம் பண்ருட்டி சதீஷ் குமார், 33, கோவை பெரியநாயக்கன்பாளையம் சுரேந்திரன், 34, சுதாகர், 37, ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இதேபோல பலரையும் ஏமாற்றி, கோடிக்கணக்கில் இந்த கும்பல் பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த துணிகர மோசடி கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட ஜி.சரவணகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.