பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி, முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடந்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடித்தவுடன், தலைமை முறைதாரர் மனோகரன், மயான அருளாளி அருண் உட்பட பலர் அம்மனின் சூலம் மற்றும் பூஜை பொருட்களுடன், ஆழியாற்றங்கரைக்கு சென்றனர். அருளாளி ஆற்றில், நீராடிவிட்டு தீர்த்தம் எடுத்து வந்தார்.
மாசாணியம்மனின் உருவம் சயன கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு, 2:00 மணிக்கு பம்பை, மேளதாளங்கள் முழங்க அம்மனின் திரு உருவத்தை மறைத்து வைத்திருந்த திரை விலக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின், அருளாளி எடுத்து வந்த அம்மனின் தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. எலுமிச்சை மாலைகளால், அம்மனின் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிறகு பம்பைக்காரர்கள் பக்தி பாடல்களை பாடினர்.
அதிகாலை, 2:45 மணிக்கு அருளாளிக்கு அருள் வந்து அம்மன் மீது வைக்கப்பட்டிருந்த எலும்புத்துண்டை வாயில் கவ்விக் கொண்டு, கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடனமாடினார்.ஆடிக்கொண்டே அம்மன் உருவத்தை சிதைத்தார். அம்மனின் பட்டு சேலையில் பிடிமண் எடுக்கப்பட்டது. நள்ளிரவு, 3:30 மணிக்கு மேல் மயான பூஜை முடிந்தது.
மயான பூஜையில், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள், 'அம்மா தாயே... மாசாணி தாயே...' என கோஷம் எழுப்பினர். போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு ஆழியாற்றங்கரையில் கும்பஸ்தாபனம் நடந்தது. மாலையில் மகா பூஜை நடந்தது. நாளை (6ம்தேதி) குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.