கோவை;கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் கட்டுமான பொருள் கண்காட்சி, 'பில்ட் இன்டெக் - 2023', இணை கண்காட்சியாக 'வாட்டர் இன்டெக் - 2023' நடக்கின்றன. வீடு கட்டுவோருக்கு புதிய பரிமாணங்களை தரும் வகையில் கண்காட்சி நடக்கிறது.
கட்டுமானம், கட்டடங்கள், வீடுகள் கட்டும்போது அழகாக உள் அலங்காரங்களை மேற்கொள்வது வரை விளக்கம் தருகின்றனர். வழக்கமான வடிவமைப்புகளை மாற்றி, புதுமையான வடிவமைப்புகள் கொண்ட தண்ணீர் டேங்க்குகள், நவீன மின்மோட்டார்கள் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு தருவதாக உள்ளது.
டேங்க்கில் நீர் நிரம்பியவுடன் மோட்டார் நிறுத்தவும், தண்ணீர் குறையும்போது தானாக இயங்கும் வகையிலும் நவீன தொழில்நுட்ப ஸ்டார்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண, மேக் பயோசெப்டிக் டேங்க் நிறுவனம், பல்வேறு அளவுகளில் டேங்க்குகளை அறிமுகம் செய்துள்ளது.
தானியங்கி முறையில் இயங்கும் கேட், இரும்பு கதவுகள், வளைவான படிக்கட்டுக்கள், யுபிவிசி ஜன்னல்கள் போன்றவற்றில் உள்ள தொழில்நுட்பங்கள் பார்வையாளர்களை கவர்கிறது.
'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் நடக்கும் இந்த கண்காட்சி நாளை (பிப்.,6) நிறைவு பெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு அனுமதி இல்லை.
வணிக, தொழில் ரீதியான பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். மாணவர்களுக்கு நாளை மதியம் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பார்வையிட அனுமதி உண்டு. பொதுமக்கள் பார்வையிட ஒவ்வொருவருக்கும் தலா 50 ருபாய் கட்டணம் உண்டு. பதிவு செய்தல், மாஸ்க் அணிவது அவசியம்.