பல்லடம்:பல்லடம் கோழி இன நோய் ஆராய்ச்சி மையத்தில் பணியிடங்கள் நிரப்பப்படாததால், மையம் அமைக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறவில்லை.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில், கறிக்கோழி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த, ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் வாயிலாக, வாரம், 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி ஆகின்றன.
கோழிகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதல், வளர்ச்சி குறைபாடு, பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண, பல்லடம், பணிக்கம்பட்டி கிராமத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பில் கோழி இன நோய் ஆராய்ச்சி மையம், 2018ல் திறக்கப்பட்டது.
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில், 4.3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மையத்தில், கட்டடங்களும், பல லட்சம் மதிப்பிலான நவீன இயந்திரங்களும் அமைக்கப்பட்டன. இங்கு 30 பணியாளர்கள் இருக்க வேண்டும்; ஆனால், நான்கு பேர் மட்டுமே உள்ளனர். 26 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
கோழிகளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்காக ஆராய்ச்சி மேற்கொள்ள, புனேவில் உள்ள ஆராய்ச்சி மையத்தை தொடர்பு கொள்ள வேண்டிய நிலை இருந்தது. பல்லடத்தில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டதால், பணிகள் எளிதாகும் என்று கருதப்பட்டது. ஆனால், இந்த வாய்ப்பு இன்னும் கைகூடவில்லை.
திருப்பூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் குமாரரத்தினத்திடம் கேட்டபோது, ''ஆராய்ச்சி மையத்துக்கு உதவி இயக்குனர்கள், மருத்துவர்கள், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. தற்காலிகமாக, மாவட்ட கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மருத்துவர்களை கொண்டு, பணி மேற்கொண்டு வருகிறோம்,'' என்றார்.