சென்னை:வடபழநி ஆண்டவர் கோவிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து மூலவர், முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.மதியம் 1:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, பக்தர்கள் எடுத்து வந்த பாலால், முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.பின், செண்பகப்பூ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
இரவு 8:30 மணிக்கு பழநி ஆண்டவர், நான்கு மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இவ்விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை, ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்;
வேண்டுதலையும் நிறைவேற்றினர்.தைப்பூசத்தை முன்னிட்டு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், பாரிமுனை கச்சாலீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜ பெருமான், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் ஆகியவற்றில், தெப்ப உற்சவம் விமர்சையாக நடத்தப்படுகிறது.
வடபழநியில் விசேஷஏற்பாடு
வடபழநி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த 5,000 பால் குடம் எடுத்து வந்தனர். அந்த பால், ஐந்து பெரிய பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து, 'ஸ்டீல்' குழாய் வாயிலாக அர்த்த மண்டபத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. பின், முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்பட்டது.
- -நமது நிருபர்- -