நாகப்பட்டினம் : நாகையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையில் விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மூழ்கி கிடக்கிறது. எட்டிக் கூட பார்க்காத வேளாண் அலுவலர்களால் விவசாயிகள் குமுறலில் உள்ளனர்.
நாகை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. சம்பா பயிர்கள் அனைத்து பகுதிகளிலும் அறுவடைக்கு தயாரான நிலையில் மகசூல் அதிகரிக்கும் என மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் அறுவடை பணியில் தீவிரம் காட்டினர்.
மாவட்டத்தில் 10 சதவீதமே அறுவடை நிறைவடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் சாய்ந்து, விளை நிலங்களில் தேங்கியுள்ள மழை நீரில் நெற்கதிர்கள் மூழ்கி கிடக்கிறது.
தண்ணீர் வடிந்தால் தான் அறுவடை பணிகளை துவக்க முடியும்.
அதற்குள் நெல்மணிகள் உதிர்ந்து விளை நிலத்திலேயே மீண்டும் முளைத்து, அதிகளவில் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
பயிர் சேதம் குறித்து கணக்கெடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டிய வேளாண் அலுவலர்கள் மவுனம் காப்பதாக விவசாயிகள் குமுறலில் உள்ளனர்.