நாகப்பட்டினம்,: நாகை அருகே, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அரசு பஸ் கவிழ்ந்ததில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருத்துறைப்பூண்டிக்கு அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் அன்பரசன்,48, நடத்துனர் ராஜேந்திரன்,41, பணியில் இருந்தனர். பஸ்சில் 7 பயணிகள் இருந்தனர்.
நேற்று காலை 7 .௦௦ மணியளவில், இ.சி.ஆர்., சாலையில் எட்டுக்குடி அருகே சீராவட்டம் பாலம் என்ற இடத்தில் சென்ற போது, எதிரில் வந்த லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் அன்பரசன் திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
அப்பகுதி மக்கள், பஸ்சில் சிக்கிய பயணிகளை பாதுகாப்பாக மீட்டனர். விபத்தில் பஸ் ஊழியர்கள் மற்றும் பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர்.
சம்பவம் குறித்து திருக்குவளை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.