திருப்புவனம்,--திருப்புவனத்தில் பிரதமரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் போடப்படும் தார்ச்சாலை, பெயின்டிங் பணி போல நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூ நகர செயலாளர் ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்புவனம் பழையூரில் இருந்து அய்யனார் கோயில் வழியாக கலியாந்தூர் வரை 3.4 கி.மீ., தூரத்திற்கு ஒரு கோடியே 77 லட்ச ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்கப்படுகிறது.
பழையூர் - அய்யனார் கோயில் சாலையில் 150 ஏக்கர் பாசன நிலங்கள், நெல் கொள்முதல் மையம், சிலிண்டர் கிட்டங்கி உள்ளிட்டவை உள்ளன. தினசரி லாரி, டிராக்டர், வேன் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் அதிகளவில் இப்பாதையில் சென்று வருகின்றன.
பல ஆண்டுகளாக சாலை பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்த நிலையில் பிரதமரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகள் கடந்த ஓராண்டாக நடந்து வந்தது. தற்போது தார்க்கலவை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூ., நகர செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு பின் நடைபெறும்பணி தரமானதாக இல்லை. தார்கலவை பெயின்ட் செய்வது போல லேசாக அமைக்கப்படுகிறது. சாலை அமைத்த மறுநாள் காஸ் கோடவுன் அருகே பெயர்ந்துவிட்டது.தரமற்ற சாலைப்பணியால் மக்களின் வரிப்பணம்வீணாகி வருகிறது. சாலைப்பணியை தரமானதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.