விழுப்புரம் : விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையில் தைப்பூசத்தையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை சார்பில் 82வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று 6 கால ஜோதி தரிசனத்துடன் நடக்கிறது. இதற்கான விழா நேற்று துவங்கியது.
காலை 8:00 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி தீபத்தை மணிமேகலை ஜானகிராமன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, சுத்த சன்மார்க்க கொடியேற்றம் நடந்தது. காலை 11:00 மணியளவில் தீபாராதனையுடன் வழிபாடு நடந்தது.
தொடர்ந்து 3,000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சன்மார்க்க அன்பர் செல்லமுத்து தலைமை தாங்கினார். சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், நகர சேர்மன் தமிழ்ச்செல்வி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் ஆகியோர், அரிசி, காய்கறி, வேட்டி, சேலை, போர்வைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தனர்.
அருள்மாளிகை மேலாளர் அண்ணாமலை சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து திருஅருட்பா இசை, வள்ளலார் வரலாறு வில்லுப்பாட்டு, மாணவர்களின் யோகாசனம், பல்சுவை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
இன்று 5ம் தேதி தைப்பூச விழாவையொட்டி, காலை 6:00 மணி முதல் ஜோதி தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து, 10:00, பகல் 1:00; இரவு 7:00, 10:00 மணிக்கும், மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கும் ஏழு திரைகள் நீக்கி, ஆறு கால ஜோதி தரிசனம் நடக்கிறது.
ஏற்பாடுகளை விழுப்புரம் வள்ளலார் மாளிகை நிர்வாகிகள் செய்துள்ளனர்.