திண்டிவனம் : திண்டிவனம் அருகே பைக் மீது மோதி, சாலையோர டீக்கடைக்குள் டிப்பர் லாரி புகுந்ததால் பரபரப்பு நிலவியது.
திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து மரக்காணம் நோக்கி நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. மரக்காணம் ரோட்டில் அப்பாசாமி நகரில் இருந்து அண்ணா நகருக்கு புலியனுாரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., தேசிங்கு, 65; என்பவர், பஜாஜ் சிடி 100 பைக்கில், சாலையைக் கடக்க முயன்றார்.
அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர், டிப்பர் லாரியை வலது புறமாக திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தேசிங்கு மீது மோதி விட்டு, சாலையோரம் இருந்த தாமஸ், 59; என்பவரின் வீடு மற்றும் டீக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இதனால், கட்டடம் சேதமானது.
அப்போது அப்பகுதியில் இருந்த பொது மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பியோடினார். இந்த விபத்தில், தேசிங்கு படுகாயமடைந்தார்.
உடன் அவர், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். டீ கடையில் உரிமையாளர் உட்பட யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் விபத்தால் மக்கள் அச்சம்
பிரம்மதேசம் பகுதியில் உள்ள குவாரிகளுக்குச் செல்லும் டிப்பர் லாரிகள் அதிவேகமாகவும், டிரைவர்கள் போன் பேசியபடி செல்வதாலும் திண்டிவனம் - மரக்காணம் ரோடு, சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தால் அடிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சட்டுவதுடன் அச்சமடைந்துள்ளனர்.