சிறந்த வகுப்பிற்கு சுழற்கோப்பை
சகாய மேரி, தலைமை ஆசிரியர்: மாணவர்கள் சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடன் வளம்வருவதற்கு பயிற்சி அளித்துவருகிறோம். சிறப்பாக செயல்படும் வகுப்பிற்கு ஜூலை 15, நவ.14 ல் நடக்கும் நிகழ்சியில் சுழற்கோப்பை வழங்குகிறோம். சுழற்கோப்பையானது, வகுப்பு மாணவர்களின் ஒட்டு மொத்த செயல்பாடு, கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்பு உள்ளிட்டவற்றை கொண்டு புள்ளிகள் கணக்கிடப்படுகிறது. சதீஸ்கண்ணன், பார்த்தசாரதி, சாரதி உள்ளிட்ட தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு ஹாக்கி பயிற்சி வழங்குகின்றனர். மாணவர்களுக்கு யோக பயிற்சியும் அளிக்கிறோம். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்துகின்றனர்.
சுயதொழில் பயிற்சியும் உண்டு
வி.ரீமா எமிலி, ஆசிரியர்: மாணவர்களுக்கு சுயதொழில்களான கைவினைப்பொருட்கள் தயாரித்தல், தையற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளும் கற்றுத்தருகிறோம். வாழ்க்கையில் அவர்கள் சோர்ந்து விடாமல் இருக்க தன்னம்பிக்கை வகுப்புகளும், சுயதொழில் பற்றியும் வகுப்பில் கூறுகிறோம். மரங்கள் வளர்ப்பின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலில் பாதுகாப்பில் மரங்கள் பங்களிப்பை எடுத்துரைத்து மரம் வளர்ப்பதையும் ஊக்குவிக்கிறோம்.
கலைதிறனுக்கும் வகுப்புகள்
ஜூலியட் கரோலின் மேரி, ஆசிரியர்: பள்ளியில் தினமும் மாலை இரண்டு பாடவேளைகள் ,வாரத்திற்கு ஒரு நாள் கலைதிறன் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. பயிற்சியில் நடனம், ரங்கோலி, அறிவியல் கண்காட்சி தொடர்பான செய்முறை பயிற்சிகள், வினாடி வினா போட்டி பயிற்சி, ஓவிய பயிற்சி, கட்டுரை எழுதுவதற்கு பயிற்சிகள் கொடுக்கிறோம். சிறுவர் பாராளுமன்றம் மூலம் தேர்தல் நடைமுறைகள், வாக்காளர்களின் பங்கு உள்ளிட்டவற்றையும் கற்றுத்தருகிறோம்.
கட்டுரை, கவிதைகளில் விழிப்புணர்வு
சந்தோஷ் பபியான், 10ம் வகுப்பு மாணவர்: கவிதை கட்டுரை எழுதுவதில் அதிக ஆர்வம் உள்ளது. திறனறித்தேர்வில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளேன். மக்களுக்கு வழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் கட்டுரைகள் எழுதுகிறேன். கணிதம், அறிவியல், சமூகவியல் பாடங்களில் கவனம் செலுத்துகிறேன். பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பேன். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
இந்திய அணிக்காக விளையாடுவேன்
ராகேஷ்குமார், 9ம் வகுப்பு மாணவர்: சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் உண்டு. பள்ளியில் ஹாக்கி பயிற்சியாளர்கள் மூலம் ஆர்வமுடன் விளையாடுகிறேன். தற்போது மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்குபெறுகிறேன். இந்திய அணிக்காக ஹாக்கி விளையாட வேண்டும் என்பது எனது ஆசை. அதற்காக தொடர்பயிற்சிகளை மேற்கொள்கிறேன்.
புத்துணர்ச்சியுடன் செயல்பட முடிகிறது
ஜா.தீபிகா, 8ம் வகுப்பு மாணவி: ஒரு ஆண்டாக பள்ளியில் வாலிபால் பயிற்சி மேற்கொள்கிறேன். தினமும் நேரம் தவறாமல் பயிற்சியில் பங்கேற்கிறேன். விளையாட்டில் மட்டுமல்ல படிப்பிலும் தனி கவனம் செலுத்தி வருகிறேன். தினமும் விளையாடுவதால் சோர்வின்றி புத்துணர்ச்சியுடன் செயல்பட முடிகிறது.பயிற்சி முடிந்ததும் மாலையில் தவறாமல் படிக்கிறேன்.
பேப்பரில் மனித உருவம் செய்கிறேன்
எம்.ஜாஸ்மின் ஜெனிபர், பிளஸ் 2 மாணவி: கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்ததால் பல பொருட்களை செய்து வருகிறேன். பேப்பர்களை ஒட்ட வைக்காமல் பறவைகள், விலங்குகள், மனித உருவங்களை செய்கிறேன். மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளேன். தற்போது நடந்த போட்டியில் கூட மாவட்ட அளவில் 3 இடம் பெற்றுள்ளேன்.