தேனி : கால்நடைகளுக்கு புரூசெல்லோஸிஸ்' எனும் கருச்சிதைவு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால், 12,300 தடுப்பூசிகள் செலுத்த உள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சுப்பையாபாண்டியன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: 'புரூசெல்லோஸிஸ்' எனும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் ஒருவித பாக்டீரியாவால் கால்நடைகளுக்கு கருச்சிதைவு
ஏற்படுகிறது. இந்நோய் கால்நடைகள், குதிரைகள், நாய்களுக்கு பரவும். பாதிப்பு ஏற்பட்டால் இறந்த நிலையில் கன்று பிறப்பது,
நலிந்த கன்று, நச்சுக்கொடி விழாமல் தங்குதல், பால் உற்பத்தி குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
ஒருமுறை தடுப்பூசி செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புத் திறன் வெளிப்படும்.
மாவட்டத்தில் 4 முதல் 8 ம் மாதம் உரை உள்ள கிடேரி கன்றுகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக கருச்சிதைவு நோய் தடுப்பூசி இம்மாதம் பிப்., 28 வரை செலுத்தப்பட உள்ளது. கிடேரி கன்றுகளுக்கு காது வில்லைகள் பொருத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 12,300 தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
கையிருப்பில் 40 ஆயிரம் தடுப்பூசிகள் உள்ளன. விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள உதவி கால்நடை மருத்துவமனைகளுக்கு கிடேரி கன்றுகளை அழைத்து சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.