மூணாறு : இடுக்கி மாவட்டம் செருதோணி அருகே பைனாவ்வில் உள்ள எஸ்.பி. அலுவலக வளாகத்தில் போலீசார் சார்பில் காய்கறி, பழ வகை சாகுபடி அமோகமாக நடக்கிறது.
தரிசு பூமியை விளை நிலங்களாக மாற்றி காய்கறி உற்பத்தியை அதிகரிப்பது, இயற்கை உரம் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவது, பூச்சி கொல்லி மருந்துகளை தவிர்ப்பது, பணியின் இடையே போலீசாரை சற்று ஆறுதல் அடைய செய்வது ஆகியவை காய்கறி சாகுபடியின் நோக்கம்.
அதற்கு பசுமை கேரளம் திட்டத்தில் காய்கறி சாகுபடியில் தன்னிறைவு பெறும் வகையில் வேளாண்துறை உதவியுடன் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் 50 சென்ட் நிலத்தில் 39 வகை காய்கறி, பழம் வகைகள் சாகுபடி நடந்தது.
காலிபிளவர், முட்டைகோஸ், தக்காளி, பல்லாரி, பாகல், புடலை, இஞ்சி, புதினா, கடுகு, மல்லி, மிளகாய், பீன்ஸ் காய்கறிகள், கீரை வகைகள், வாழை, ஆரஞ்ச், கொய்யா, எலுமிச்சை உள்பட பல்வேறு வகை பழங்கள் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அதன் அறுவடையை எஸ்.பி. குரியாகோஸ் தொடங்கி வைத்தார்.
அங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் 'போலீஸ் மெஸ்' க்கு பயன்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.