மதுரை : ''கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த ரவுடி சரித்திர பதிவேடு போன்று கஞ்சா வியாபாரிகளுக்கும் சரித்திர பதிவேடு முதன்முறையாக தென்மண்டலத்தில் பராமரிக்கப்படுகிறது. அதேபோல் முதன்முறையாக நீதிமன்றத்திலேயே சம்பந்தப்பட்டோரிடம் பிணை பத்திரங்கள் எழுதி வாங்கப்பட்டு வருகிறது,''என, தென்மண்டல ஐ.ஜி., அஸ்ராகர்க் கூறினார்.
அவர் கூறியதாவது: கடந்தாண்டில் 13 கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகள், அவர்களின் நெருங்கிய உறவினர்களின் ரூ.12.50 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதே போல் மற்ற கஞ்சா வழக்குகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டில் தென்மண்டலத்தில் 1091 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டோரின் 1956 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. 1377 குற்றவாளிகள் மீது நன்னடத்தைக்கான பிணை பத்திரம் பெறப்பட்டுள்ளது. பிணை பத்திர விதிமுறைகளை மீறிய 58 கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்தாண்டு ஜனவரி வரை 255 கஞ்சா குற்றவாளிகளிடம் பிணை பத்திரம் பெறப்பட்டது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதிமன்றத்தில் கஞ்சா வழக்குகளில் தண்டனை அளிக்கும்போது போதை பொருள் ஒழிப்புச்சட்டப்பிரிவு( NDPS) பிரிவு 34-ன் கீழ் நீதிமன்றமே நன்னடத்தைக்கான பிணை பத்திரம் பெறலாம் என்ற அடிப்படையில் தென்மண்டலத்தில் 54 பேரிடம் பிணை பத்திரம் பெறப்பட்டுள்ளது.
கஞ்சா வியாபாரிகளுக்கு சரித்திர பதிவேடு உருவாக்கி மதுரை 85 பேர், திண்டுக்கல் 131, தேனி 59, ராமநாதபுரம் 26, சிவகங்கை 26, விருதுநகர் 132, திருநெல்வேலி நகர் 17, மாவட்டம் -46, தென்காசி 15, துாத்துக்குடி 28, கன்னியாகுமரி 59 என தென்மண்டலத்தில் 624 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் கஞ்சா விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் என நம்புகிறோம். இவ்வாறு கூறினார்.