மதுரை : ''என்னை பிரிந்து வாழ்ந்ததோடு, மறுதிருமணம் செய்வது குறித்து வாட்ஸ் ஆப்பில் ஸ்டேடட்ஸ் வைத்திருந்ததால் ஆத்திரத்தில் குத்திக்கொலை செய்தேன்'' என மதுரையில் காதல் மனைவி வர்ஷாவை 19, கொலை செய்த கணவர் பழனிகுமார் 23, போலீசாரிடம் தெரிவித்தார்.
மதுரை தெற்குவாசல் சப்பாணி கோயில் தெருவைச் சேர்ந்தவர் வர்ஷா. இவரது காதல் கணவர் காமராஜர்புரம் பழனிகுமார். திருமணமான ஒருமாதத்திலேயே கணவரை பிரிந்த வர்ஷா, பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் மதியம் வீட்டருகே நடந்து வந்த வர்ஷாவை, பழனிகுமார் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்தார்.
வாட்ஸ் ஆப்பில் வாக்குவாதம்
போலீசாரிடம் அவர் கூறியதாவது: என்னை நம்பி வர்ஷா வந்ததால் அவருக்கு வேண்டியதை செய்தேன். நகைகள் வாங்கிக்கொடுத்தேன். செய்முறைகளை செய்தேன். ஆனால் என்னுடன் வாழ பிடிக்கவில்லை எனக்கூறி போலீசில் புகார் செய்தார். எவ்வளவோ சமரசம் செய்தும் அவர் ஏற்கவில்லை. நகைகளை திருப்பித்தரவில்லை. அவர் அப்பாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனாலும் அடிக்கடி வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் செய்வேன். அவரும் பதில் அளிப்பார்.
இன்று(நேற்றுமுன்தினம்) காலை எனக்கும், அவருக்கும் வாட்ஸ் ஆப்பில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஸ்டேட்டஸில் மறுதிருமணம் செய்வது குறித்து பதிவிட்டிருந்தார். அது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மதியம் வர்ஷாவை தேடிச்சென்றபோது எதிரே வந்தார். அருகில் இருந்த ரம்பத்தால் குத்திக்கொலை செய்தேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போலீசை குழப்பிய பழனி
போலீசார் கூறியதாவது: வாட்ஸ் ஆப்பில் இருவருக்குமான உரையாடலை ஆய்வு செய்ய பழனிகுமாரின் அலைபேசியை கேட்டபோது, ஆண்டராய்டு வசதி இல்லாத 'பட்டன்' போன் ஒன்றை கொடுத்தார். 'இதில் எப்படி வாட்ஸ் ஆப்பில் பேசியிருக்க முடியும்' என கேட்டபோது, 'அந்த அலைபேசியை சாக்கடையில் வீசிவிட்டேன்' என தெரிவித்தார். 'வர்ஷாவை கொலை செய்த ரம்பம் எங்கு கிடைத்தது' என கேட்டதற்கு, கொலை செய்த இடத்திலேயே கிடைத்ததாக கூறினார். அவரது பேச்சு முன்னுக்கு பின் முரணாக உள்ளது. தொடர்ந்து விசாரிக்கிறோம், என்றனர்.