கோவை: ''தமிழகத்தில் 3 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தரப்படும்; முன்மாதிரி திட்டத்தை செயல்படுத்த கோவையில் சிறப்பு மையம் அமைக்கப்படும்,'' என, மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
கோவை 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் திறன்மேம்பாட்டு திட்டம் குறித்து கோவை தொழில் அமைப்பினருடன் மத்திய எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன்மேம்பாட்டு திட்ட இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பேசியதாவது:
கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட ஆய்வில், மத்திய அரசு திட்டத்தின் பலன்கள் 15 சதவீதம் மட்டுமே மக்களை சென்றடைந்தது. தற்போது 100 சதவீதமும் நேரடியாக மக்களுக்கு சென்றடைகிறது. இறக்குமதி செய்யப்பட்டு வந்த மொபைல்போன்கள், தற்போது ஏற்றுமதியாகின்றன. 8 ஆயிரம் ஸ்டார்ட் அப் தொழில்கள் உருவாகியுள்ளன.
தமிழகத்தில் 3லட்சம் பேருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முன்மாதிரி திட்டமாக கோவையில் ஒரு சிறப்பு திறன்மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்கப்படும். இதற்கான வடிவமைப்பை உருவாக்க கோவையில் அடுத்த வாரம் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.
மார்ச் மாதத்தில் இந்த மையத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்யும். பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, தொழில்துறையில் பணியாற்றுவோருக்கும் இந்த பயிற்சி திட்டத்தை அரசு செயல்படுத்தும். தொழில் அமைப்புகள், தொழில்துறையினர் திட்டத்தில் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கொடிசியா தலைவர் திருஞானம் வரவேற்றார். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வானதி, கோவை தொழில்வர்த்தக சபை தலைவர் ஸ்ரீராமுலு, தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர் சங்கத்தின் (சீமா) தலைவர் விக்னேஷ், கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர் சங்க தலைவர் திருமலைக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
'கொடிசியா' கவுரவ செயலாளர் சசிக்குமார் நன்றி தெரிவித்தார்.
வியக்க வைத்த அமைச்சர்
மதிய உணவின்போது அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தொழில்துறையினருடன் அமர்ந்து உணவு அருந்தினார். கூட்டம் துவங்கும் நேரத்திற்கு முன்பே வந்த அவர், தொழில்துறையினருடன் மத்திய பட்ஜெட் குறித்த கருத்துக்களை கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். அமைச்சருக்கான பந்தா இல்லாமல், சாதாரணமாக எல்லோரையும் சந்தித்தார். அதோடு, மேடையில் அரசின் சாதனைகளை தெளிவாக எடுத்துச்சொன்னார்.
தொழில்துறையினரின் கருத்துக்களை அவரே குறிப்பெடுத்துக் கொண்டதுடன், கேள்விகளுக்கும் உடனே பதில் அளித்தார். தமிழக அமைச்சர்களின் பந்தாவும், மத்திய அமைச்சரின் பணிவும் தொழில்துறையினரை திகைக்க வைத்தது.