சென்னை: ''நாட்டின நாய்களான சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம் ஆகிய இனங்களை பாதுகாக்க, அரசு நிதி ஒதுக்கியுள்ளது,'' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தர் செல்வகுமார் தெரிவித்தார்.
சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரியில், கால்நடை சிகிச்சை முறையை உலக தரத்திற்கு உயர்த்துவதற்கான, தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் நேற்று துவங்கியது.
சிறப்பான சிகிச்சை முறையை கையாண்ட மருத்துவர்களுக்கு, துணை வேந்தர் செல்வகுமார்,பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
பின், துணை வேந்தர் பேசியதாவது:
களப் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களின் பங்கு, கிராமப்புற ஏழை விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுபோன்ற கருத்தரங்குகள் களப் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களின் செயல் திறனை மேம்படுத்தும். நாட்டின மாடுகளான காங்கேயம், பர்கூர், உம்பலாச்சாரி, ஆலம்பாடி ஆகிய இனங்களை பாதுகாக்க, அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல், நாட்டின நாய்களான சிப்பிப்பாறை, கன்னி, ராஜபாளையம் போன்ற இனங்களையும் பாதுகாக்க, நிதி ஒதுக்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பஞ்சாப் மாநில குரு அங்கட்தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணை வேந்தர் இந்திரஜித் சிங், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரி முதல்வர் கருணாகரன், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் சிகிச்சையியல் இயக்குனர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.