மேட்டுப்பாளையம் : குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, திருகல்யாண உற்சவம் நடந்தது.
இந்தாண்டு, 3ம் தேதி காலை, 10:00 மணிக்கு காப்பு கட்டுதலும், இரவு வள்ளி மலையில் இருந்து அம்மன் அழைப்பும் நடந்தது. நேற்று காலை, 4:30 மணிக்கு, கால சந்தி அபிஷேக பூஜை நடந்தது. 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் துவங்கியது.
வள்ளி, தெய்வானை சமேதராக, குழந்தை வேலாயுத சுவாமி, திருமண கோலத்தில் மண்டபத்தில் எழுந்தருளினார்.
விழாவில் கோவில் அர்ச்சகர்கள் வள்ளி, தெய்வானை கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தனர். தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, தாலி சரடு, வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு ஆகிய பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று மாலை, 6:00 மணிக்கு சிறிய தேரில் வள்ளி, தெய்வானை சமேதராக, சுவாமி திருவீதி உலா நடக்க உள்ளது. 6ம் தேதி காவடி செலுத்தும் சிறப்பு பூஜை நடக்கிறது.