ஈரோடு: ஈரோடு அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வேட்பாளர் களம் நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் காங்., வேட்பாளர் இளங்கோவன் பேசுகையில், ''நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, சென்வாட் வரியை அகற்ற, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி மூலம், மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பினோம். பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பேசி, சென்வாட் வரி நீக்கப்பட்டது.
அதுபோல, இத்தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து முயல்வேன்,'' என்றார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசும்போது, ''மாநகர பகுதி சாலை விரிவாக்கம், சீரமைப்புக்காக முதலில், 350 கோடி ரூபாயும், பின், 480 கோடி ரூபாயும் அமைச்சர் நேரும் மூலம் பெற்றுள்ளோம். இக்கூட்டத்தில் பல்வேறு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட கோரிக்கைகளை விரைவாக பரிசீலித்து, ஆறு மாதத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.
நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் நேரு பேசியதாவது:
ஈரோடு கனி மார்க்கெட் புதிய வளாகத்துக்கு, ஏற்கனவே அங்கு கடை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒதுக்க வேண்டும். சொத்து வரியை குறைக்க வேண்டும். சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என, 3 கோரிக்கை தெரிவித்தனர். விரைவாக நிறைவேற்றப்படும். தற்போதைய நிலையில் எனது துறை மூலம், ஈரோடு கிழக்கில் தார் சாலை அமைக்க, 87.44 கோடி, மண் சாலை அமைக்க, 48 லட்சம், பேவர் பிளாக் கல் அமைக்க, 2.8 கோடி ரூபாய், கான்கிரீட் தளம் அமைக்க, 13.64 கோடி ரூபாய், சிறு பாலம் கட்ட, 52.61 கோடி, வடிகால் அமைக்க, 40 கோடி, மேற்கு தொகுதியில் தார் சாலை அமைக்க, 77.85 கோடி ரூபாய், மண் சாலை அமைக்க, 1.4 கோடி ரூபாய், கான்கிரீட் தளம் அமைக்க, 13.22 கோடி ரூபாய், பேவர் பிளாக் கல் அமைக்க, 1.61 கோடி ரூபாய், சிறு பாலங்கள் அமைக்க, 63 கோடி ரூபாய், வடிகால் அமைக்க, 8.72 கோடி ரூபாய் என மொத்தம், 321.22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். கூட்டத்தில் அமைச்சர்கள் வேலு, த.மோ.அன்பரசன், பெரியகருப்பன், மெய்யநாதன், எம்.பி., கணேசமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.