ஈரோடு:
ஈரோடு அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வேட்பாளர் களம் நிகழ்ச்சி நடத்தினர்.
பொது செயலாளர் ரவிசந்திரன் வரவேற்றார். தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் தென்னரசு பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில்தான், கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம், மேம்பாலம், கனி மார்க்கெட் வணிக வளாகம், காளை மாட்டு சிலை அருகே மாநகராட்சி வணிக வளாகம், ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் என அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்பட்டது. அத்திக்கடவு - அவினாசி திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்பாட்டக்கு கொண்டு வந்தால், அ.தி.மு.க.,வுக்கு பெயர் கிடைத்துவிடும் என்பதால், 10 சதவீத பணியை நிறைவேற்றாமல் வைத்துள்ளனர். நாங்கள் எதிர் கட்சியாக இருந்தாலும், அரசிடம் வலியுறுத்துவோம். கடந்த, 2 ஆண்டுகளில் தி.மு.க., அரசால் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. அவ்வாறு திட்டத்தை செய்திருந்தால், பட்டியலிடட்டும். இவ்வாறு பேசினார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் பாண்டியராஜன், தங்கமணி ஆகியோரும் பேசினர். இதில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராமலிங்கம், கருப்பணன் உட்பட பலர் பங்கேற்றனர்.