ஈரோடு: ''விசைத்தறிக்கு, 1,000 யூனிட் இலவச மின்சார பயன்பாடு தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும்,'' என, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.
ஈரோட்டில் நேற்று, கிழக்கு தொகுதிக்கான வேட்பாளர் மேடை நிகழ்ச்சி நடந்தது. இதில் காங்., வேட்பாளர் இளங்கோவன் மற்றும் அமைச்சர்கள் முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: விசைத்தறி, கைத்தறிக்கு இலவச மின்சார பயன்பாடு அளவு அதிகரித்து முதல்வர் அறிவித்துள்ளார். இது தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பு அல்ல. கடந்த சில வாரங்களாக இதுபற்றி முதல்வரிடம் பேசி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, விசைத்தறி ஒன்றுக்கு இதுவரை, 750 யூனிட் இலவச மின்சாரம் என்பது, 1,000 யூனிட்டாக உயர்த்தப்படுகிறது.
கைத்தறிக்கு, 200 யூனிட் இலவச மின்சாரம் இனி, 300 யூனிட்டாக உயர்த்தப்படும். விசைத்தறி மற்றும் கைத்தறிக்கு கூடுதலாக வழங்கப்படும் இலவச மின்சாரம் யூனிட்டுக்கான தொகையை, அரசு சார்பில் நேரடியாக மின்வாரியத்துக்கு மானியமாக செலுத்தப்படும். தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடப்பதால், உடனடியாக அரசாணை வெளியிட இயலாது.
தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி அரசாணை விரைவில் வெளியிடப்படும். கடந்த காலங்களில் மின்வாரியம் மிகவும் நெருக்கடியான சூழலில் இருந்தது. தற்போதைய ஆட்சியில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கையால், தற்போது மூச்சு விடும் அளவுக்கு தரம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.