ஈரோடு: ஈரோட்டில் நள்ளிரவில் கடத்தப்பட்ட சரக்கு வாகனத்தை, மக்கள் தகவலால் பிடித்த போலீசார், பழங்குற்றவாளியை கைது செய்தனர்.
ஈரோடு, நேரு வீதியில், ஒரு லாரி சர்வீஸ் நிறுவனம் முன் நேற்று முன்தினம் நள்ளிரவில், பொலிரோ பிக்-அப் (சரக்கு வாகனம்) சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது வந்த வாலிபர், வாகனத்தை இயக்கி ஓட்டி சென்றார்.
வெண்டிபாளையம், லட்சுமி நகர் பகுதியில் சென்றபோது வாகனம் நிலை தடுமாறி பக்கவாட்டு பகுதியில் சாய்ந்து நின்றது. வாகனத்தை ஓட்டி சென்ற வாலிபர் இறங்கினார். அப்போது அவ்வழியே ஜே.சி.பி., வாகனம் வரவே, வேனை மீட்டுத்தர கேட்டுள்ளார். வேனை மீட்க பணம் கேட்டபோது, பணம் என்னிடம் இல்லை, தங்க நகை உள்ளது என நகைகளை காட்டியுள்ளார்.
சந்தேகமடைந்த ஜே.சி.பி. டிரைவர் அங்கிருந்தவர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, ஈரோடு டவுன் கிரைம் போலீசார் சென்று, வாலிபரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் கடலுார் மாவட்டம் கூடலுார், பன்ரொட்டி மாளிகை மேடு, எஸ்.கே.பாளையம் மாரியம்மன் கோவில் வீதி சுந்தரவேலு, 22, என தெரிந்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒரு வீட்டில் இரண்டு தங்க வளையல், ஒரு தங்க செயினை திருடி தப்பி ஈரோடு வந்துள்ளார்.
அங்கு பிக்-அப் வேனை கடத்திச் சென்றபோது விபத்தில் வாகனம் சிக்கியதுடன், அவரும் சிக்கி விட்டார்.
சுந்தரவேலுவை கைது செய்த போலீசார், நகைகள் மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். அவர் மீது ஏற்கனவே, மேட்டுப்பாளையத்தில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.