நிதி நிறுவன ஊழியரிடம்
67,700 ரூபாய் பறிமுதல்
ஈரோட்டை சேர்ந்த நிதி நிறுவன ஊழியரிடம், தேர்தல் அதிகாரிகள், 67,700 ரூபாயை பறிமுதல் செய்தனர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நிலை கண்காணிப்பு குழு எண்-2 அதிகாரிகள், சூரம்பட்டி 4 ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த நிதி நிறுவன ஊழியர் கோபாலகிருஷ்ணன் என்பவர், 67,700 ரூபாயை எடுத்து வந்தார்.
அத்தொகைக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அத்தொகையை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் உத்தரவுப்படி, மாவட்ட கருவூலத்தில் செலுத்தினர்.
5வது நாளில்
10 பேர் மனுத்தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதியில், ஐந்தாவது நாளில், 10 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த, 31 முதல் நேற்று முன்தினம் வரை, 36 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று விஷ்வ பாரத் மக்கள் கட்சி, தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம், இந்திய குடியரசு கட்சி அமைப்புகள் மற்றும் சுயேட்சைகள் உள்பட, ௧௦ பேர், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து மனுத்தாக்கல் செய்தோர் எண்ணிக்கை, ௪௬ ஆக உயர்ந்தது.
நாட்டுத்துப்பாக்கி பதுக்கியவர் கைது
பவானிசாகர் அருகே பெரியகள்ளிப்பட்டி கிராமத்தில், விலங்குகளை வேட்டையாட, சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக மாவோயிஸ்ட் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தொழிலாளி வெள்ளியங்கிரி, 30, வீட்டு பின்புறம் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். வெள்ளியங்கிரியை பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
2,200 டன் யூரியா வரத்து
ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காசோளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி போன்ற பயிர் தற்போது பயிரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாவட்ட தேவைக்காக குஜராத்தில் இருந்து கிரிப்கோ நிறுவனம் மூலம், 2,200 டன் 'பாரத் யூரியா' உரம், ரயிலில் ஈரோடு வந்தது. தற்போது மாவட்டத்தில் யூரியா உரம், 5,347 டன், டி.ஏ.பி., உரம், 2,585 டன், பொட்டாஷ், 1,400 டன், காம்ப்ளக்ஸ், 10,169 டன், சூப்பர் பாஸ்பேட், 896 டன் என தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்சாரம் பாய்ந்து
தொழிலாளி பலி
அந்தியூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில், கட்டட தொழிலாளி இறந்தார்.
அந்தியூர் அருகே மரவபாளையத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம், 43; கட்டட தொழிலாளி. இவரது பாத்ரூம் அருகில், தாயார் கூரை வீட்டில் மின் இணைப்பு கொடுத்துள்ளார். அதற்கான ஒயர் இருவீட்டின் தகரக்கூரை வழியாக செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மோகனசுந்தரம் பாத்ரூம் செல்லும்போது, மின் ஒயர் சென்ற இரும்பு குழாயை பிடித்துள்ளார். அப்போது கம்பியில் பாய்ந்த மின்சாரம் அவர் மீது பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.
குடும்பத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் இறந்து விட்டார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஒற்றை யானை மீண்டும் அட்டகாசத்தால் அச்சம்
ஜீரகள்ளி வனச்சரகத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக கருப்பன் என்ற ஒற்றை யானை, வனப்பகுதியோர கிராமங்களில் புகுந்து, பயிர்களை நாசம் செய்து வருகிறது. கும்கிகளை வரவழைத்து, யானையை பிடிக்கும் முயற்சியில், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் ஒரு பகுதியாக யானைக்கு மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டது. ஆனாலும், யானை தப்பியது. அளவுக்கு அதிமாக மருந்து செலுத்தியதால், யானையை பிடிக்கும் முயற்சியை, வனத்துறையினர் கைவிட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், திகினாரை கிராமம் கரளவாடி ரங்கசாமிகோவில் தோட்ட பகுதியில், கரும்பு தோட்டத்தில் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் சேதம் செய்தது. விரட்ட சென்ற விவசாயிகளை துரத்தியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தர அழைப்பு
இடைத்தேர்தல் தொடர்பாக, தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்களை தெரிவிக்க, அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
கிழக்கு தொகுதி தேர்தலுக்காக தேர்தல் செலவினம், தணிக்கை செய்ய பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஜி.பி.எஸ்., கருவி பொருத்திய வாகனங்களில் செல்கின்றனர். இவர்களது இயக்கத்தை ககெல்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, 24 மணி நேரமும் கண்காணிக்கிறது.
தவிர, மாநகராட்சி வளாகத்தில், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்த புகார்களை கட்டணமில்லாத தொலைபேசி எண்: 1800 425 94980 மூலம் தெரிவிக்கலாம்.
இதுவரை தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, 122 புகார்கள் பெறப்பட்டு, 115 புகாருக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.