கோவை:மாநில அளவில் 'என்.சி.சி., பிரீமியர் லீக் 6.0' வெள்ளைப்பந்து டி 20 கிரிக்கெட் போட்டி, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மைதானங்களில் நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 32 அணிகள், லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டியிட்டன.
இப்போட்டியில், கோவை ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர்லீக் சுற்றில் மூன்று போட்டிகளில் போட்டியிட்டு, மூன்றிலும் வென்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறினர்.
தொடர்ந்து நடந்தஅரையிறுதிப்போட்டியில், விராட் கோலி சி.சி., அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இறுதிப்போட்டியில், பியூச்சர் ஸ்டார் கிரிக்கெட் அகாடமி அணியை எதிர்த்து விளையாடியது.
முதலில் பேட்டிங் செய்த பியூச்சர் ஸ்டார் அணியின் துவக்க வீரர் குமார், (69) சிறப்பாக விளையாடினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற, அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்தது. ராமகிருஷ்ணா அணியின் கேப்டன் அபினவ் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்த களமிறங்கிய ராமகிருஷ்ணா அணியின் துவக்க வீரர் ஹரிநிசாந்த், (80) அதிரடியாக விளையாடினார். அணியின் கேப்டன் அபினவ் (27*) பொறுப்பாக விளையாடினார். 15.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து, 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இத்தொடரில் சிறப்பாக விளையாடி, 192 ரன்கள் மற்றும் 14 விக்கெட்களை கைப்பற்றிய ராமகிருஷ்ணா அணியின் அபினவ், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 16 விக்கெட்கள் வீழ்த்திய மிதுன், சிறந்த பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார்.