மயிலாப்பூர்:மயிலாப்பூரில், பல ஆண்டுகளாக தொடரும் குப்பை பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும், என கோரிக்கை எழுந்து உள்ளது.
மயிலாப்பூர், கபாலி தோட்டம், பல்லாக்கு மான்யம் உள்ளிட்ட பகுதிகளில், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உட்பட, 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்த பகுதியில் உள்ள பல தெருக்களில் குப்பை அதிக அளவில் குவிந்துள்ளது.
குறிப்பாக, கால்வாய் கரை சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளால், அந்த பகுதியே குப்பை மையமாக காட்சி அளிக்கிறது.
இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் தினமும், குப்பை முறையாக அகற்றப்படுவதில்லை.
இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம், இப்பகுதியில் குடிசை மாற்று வாரிய கட்டடங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில், பல ஆண்டுகளாக குப்பை தேங்கியுள்ளது.
இதன் காரணமாக, அங்கு துர்நாற்றமும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியைச் சேர்ந்தோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து குடியிருப்புவாசிகள் சிலர் கூறியதாவது:
இந்த பகுதியில் குப்பை பிரச்னை, பல ஆண்டுகளாக தொடர் கதையாக உள்ளது. இது குறித்து தற்போது வரை, முறையான நடவடிக்கை எதுவும் இல்லை.
இப்பகுதியில் உள்ள குப்பையை நாள்தோறும் அகற்ற வேண்டும்.
கால்வாய் கரை சாலையில், கால்வாயில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற வேண்டும். இப்பகுதியில், பல ஆண்டுகளாக தொடரும் குப்பை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில், மாநகராட்சி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.