நெய், பால், அரிசிமாவு, மஞ்சள்தூள், எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் கலப்படம் உள்ளன. பேக்கிங்கில் வித்தியாசம் உள்ளது. இவை 'மிஸ்' பிராண்டுகளாக உள்ளன. இதனை தடுத்து பொது மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கும் நோக்கத்தில் 'அக்மார்க்' திட்டம் அமல்படுத்தப்பட்டது.
விருப்பத்திட்டம் என்பதால் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் தரச்சான்றிதழ் பெற ஆர்வம் காட்டவில்லை. அதிகாரிகளும் கட்டாயப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். குறிப்பாக 'அக்மார்க்' பொருட்களை வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக உள்ளது. சில இடங்களில் உளுந்து, மிளகு, அரிசி, எண்ணெய், டீ தூள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கலப்படத்துடன் தரம் குறைவாகவே விற்கப்படுவது தொடர்கிறது.
இப்பொருட்களும் 'அக்மார்க்' முத்திரை பெற்ற பொருட்களும் ஒன்றாக இருப்பதால் விலை வித்தியாசம் அதிகமாக உள்ளன.
இதனால் குறைந்த விலை என்ற பெயரில் தரமற்ற பொருட்களை மக்கள் வாங்கும் அவலம் தொடர்கிறது. அதில் கலப்படம் செய்த ரசாயன பொருட்கள் உணவாக உட்கொள்வதால் பல்வேறு நோய்களால் மக்கள் மாதிக்கப்படுகின்றனர்.
'அக்மார்க்' முத்திரை பெறும் நடைமுறையில் அதிக செலவினங்களால் கூடுதல் விலை நிர்ணயிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முத்திரை பெறுபவர்களுக்கு குறிப்பிட்ட சலுகை அளிக்க அரசு முன்வந்தால் மட்டுமே இதனை சீரமைக்க முடியும். மக்கள் மத்தியில் 'அக்மார்க்' பொருட்களை வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.