மேட்டுப்பாளையம்:சிறுமுகை அருகே வனப்பகுதியில், புள்ளிமானுக்கு சுருக்கு வைத்து பிடித்து, அதன் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற, இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சிறுமுகை வனச்சரகம், மோதூர் பெத்திக்குட்டை காப்புக்காடு வனப்பகுதியில், வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாலை, 5:30 மணிக்கு அம்மன் புதூர் வனப்பகுதியில் இருவர், மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர்.
இவர்களை விரட்டி பிடித்து, வண்டியில் இருந்த பிளாஸ்டிக் பையை பிரித்து பார்த்தனர். அதில், தோல் உரித்த ஆண் புள்ளி மான் இறைச்சியும், தலையும் இருந்தது. இவர்களிடம் விசாரணை செய்த போது, சிறுமுகை அம்மன் புதூர் காந்தி, 38; கூத்தாமண்டிபிரிவு கண்ணன், 37 ஆகிய இருவர் என தெரியவந்தது.
இது குறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில்குமார், இருவரிடம் விசாரணை செய்த போது, அம்மன் புதூர் வனப்பகுதியில், சுருக்கு கம்பி வைத்து, ஆண் புள்ளி மானை பிடித்து, தோல் உரித்த பின்பு, இறைச்சியை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. இவர்களை கைது செய்த வனத்துறையினர், இவர்களிடம் இருந்து, மானின் இறைச்சி, கத்தி, சுருக்கு கம்பி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.